Monday, November 1, 2010

வாழாத தருணங்கள்


எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு எல்லோரும் கலந்து
கொள்ள அழைப்பும்விடப்பட்டு
நமது உயர்ந்த இருக்கையின் கால்களை ஏந்திப்
பிடித்திருக்கிறவர்களின் முன்பாக
பறவைகள் இரைதேடுவதற்காக மிகுந்த மகிழ்ச்சியோடு
இறக்கைகளைச் சிக்கெடுத்து உதறி விரித்து
வானெழும்பும் அற்புதத் தருணங்களில் அது எப்போதும்
நமக்குப் பிடித்தமானது என்பதை அனுபவிக்கமுடியாத
தருணத்திலும் இதமான வெயிலின் கம்பளம் விரிகின்ற
வெப்பத்தை உணரும் பொழுதிலும்
எங்கோ இசைக்கப்பட்டு வழிகின்ற ஒரு அற்புதமான
இசையின் கிறங்கித் தவிக்கின்ற தருணத்திலும்
நம்மீது நிகழ்த்தப்படுகின்ற
ஒரு திருடனின் மீது..அல்லது ஒரு தெருநாயின் மீது..
ஒரு பிடிக்காத ஒருவனின்மீது எறிகின்ற கற்குவியல்களைப்
போல நமக்கு அவமானங்கள் பூசப்படுகின்றபோது
அதையுணராமல்..அதைத் தடுக்காமலும்..அதுபோன்ற
தருணங்கள் நமக்குப் பிடிக்காத யாருக்கேனும்
நிகழ்ந்துவிடவேண்டும் என்றெண்ணி மருகுகிற பொழுதில்
நாம் வாழாதிருக்கிறோம் இந்த
வாழ்வின் அற்புத தருணத்தை.....


மிக உயர்ந்த
உச்சத்திலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
இலைகள்...

அதற்குமேலான
பரந்து விரிந்த ஆகாயவெளியிலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
சிறகுகள்...

உயர்ந்ததின் உச்சம்
பணிதலென்பது பழைய ஞானம்
என்றாலும்
அது ஞானம்தான்..

தரைவிட்டெழும்பா
உறுதிசெய்யப்பட்டுவிட்ட மாயவாழ்வின்
சகலவிதிகளிலும் சிக்குண்டு
உதிர்ந்துவிடுகின்ற
மனித வாழ்வின் அத்தனை பிரயத்தனங்களும்தான்
எல்லாவித இரைச்சல்களுடனும்
எல்லா உயிர்களுக்குமான
இடையூறுகளுடனும்
இறங்குகின்றன எப்போதும்
உச்சமில்லை என்றுறுத்தி...

பின்குறிப்பாகவே...

ஒரு மனித உயிர் சாம்பலான
தருணத்தின் பொழுதுகளில்
எல்லா பறவைகளின் இசைக்கூறுகளும்
ஒரேயலைவரிசையில்
அசைந்தோடுகின்றன
கோடைமுடிந்து வருகின்ற
நிறைநதியாய்....

Friday, October 29, 2010

ஜென் இலைகள் 2





ஒரு ஆழமான காயத்தின்
சீழ்பிடித்த வலியும்

நான் என் தந்தையைக்
கை ஓங்கிய தருணத்தின்
வலியும்

இப்போது என்பிள்ளை
என் கழுத்தைப் பிடித்தமுக்கிய
தருணத்தின் வலியும்

ஒன்றாகவே
உணர்த்தப்படுகின்றன

நெருக்கடியான சாலையின்நடுவே
திறந்த மார்புகளுடன்
அலையும் அந்த
மனம் பிறழ்ந்த பெண்ணின்
உணர்வான காலத்தின்
வலிகளைப் போலவே....

கோயிலைத்
திறக்கிற கதவின் ஓலியும்
பிச்சையிடுதலுக்காக
திறக்கிற வீட்டுக்கதவின் ஒலியும்
ஓர்
இசையாகப் பரவுகிறதெங்கும்..




எந்தப் பயணத்திலும்
கடைசியாகவே
நானிருந்தாலும்
அந்தப் பயணம்
என்னைக் கொண்டு
முடிகிறதென்பது
உவகையுடன்
தொடர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கிறது...





இரவில்
தொடர்ந்து குழந்தையை
அழவிடுபவர்கள்
நரகத்திற்குப் போகக் கடவர்....
என்னை மலடியாக
சாபமிட்ட கடவுளின்
சாபத்தைப் போல...
கொட்டிவிட்ட
டம்ளரிலிருந்து
நீர் பரவுதலைப்போல
வெயில் பரவும் சாலையின்
நடுவே
அதன் இயல்பில்
கடந்துகொண்டிருக்கும்
மரவட்டையின்மேல்
நசுக்கிவிடாமல்
சட்டென்று டூவீலரைத்
வளைக்கிறேன்
அதன்
நம்பிக்கையைக்
காக்கும் பொருட்டு.....





எரியும்
நண்பனின் சடலத்திலிருந்து
அவன் மகனின்
அண்மைக்கு வருகிறது
ஒரு வெப்பம்
அவன் உடலில் வழியும்
நீரின் குளிர்மையைத்
தணிக்கவும்
தானின்றி தனயன் இனி
தாங்கப்போகும்
வெப்பம் தணிக்கவுமாக....
என் கண்களிலிருந்து
வருகின்றன
நீர்த்துளிகள்
அவனுக்கு அனுசரணையாக
வேறன்றி...

Sunday, September 12, 2010




கடவுளைக் கண்டேன்
கடவுளைப் பார்த்தேன்
கடவுளைத் தரிசித்தேன்

எது சரி?




வலி மிக வலியானது
மிக அனுபவமானது
மௌனத்தின் தருணத்தில்கூட....





சாலையில் சற்றுமுன் நடந்த
விபத்தின் நேரத்திலிருந்து
என்னைப் பின்னிறுத்தியது எது?




ஒரு துயரத்தின் வாசலை
திறக்கவும் மூடவும்
செய்கிறது அனுபவம்...




கொட்டுகிறது மழை
ரயில் பயணத்தில் இறக்கிவிட்ட
கண்ணாடி சன்னலின் வழியாக
தெரிகிறது தண்டவாளக் குடிசைகளில்
சிம்னிகள் தவம்...
மழையின் ஈரம் முழுக்க
மனத்தில் வழிகிறது..
போகிற போக்கில்
இறங்குகிற சந்திப்பிற்குள்
ஒரு நிமிடம் வேண்டுங்கள்
அந்த சிம்னிக்களுக்காக....

Saturday, August 14, 2010


அதன் இயல்பானது
காத்திருக்கிறது அதற்கான தருணத்தின் பொறுமைக்கும்...
வாழ்தலின் துடிப்பையறியும் அதன் வாழ்விற்கும்...
எப்படியும் அதிகபட்சம் மரணம் வழங்கப்படும்
என்றறியாத அதன் அறியாமைக்கும்...
வயிறு நிறையும் அதே கணத்தின் முடியாத கணத்தில்
சம்பவிக்கும் மரணத்திற்கும்..
யாரும் யாரும் காரணமல்ல பரஸ்பரம்
எனும் கடவுளின் விதியறிந்துவிட்ட
மனத்தோடு
ஆழ்ந்த உறக்கம் தழுவும் வேளையில்
வந்தமரும் அந்த சின்னஞ்சிறு உருவத்திற்கும்
பெயருக்கும் உரிமையான
கொசுவிற்காக
எங்கும் தெரியா போர்வை விலக்கி
சிறிது உடலும் ரத்தமும்
சிறிது உறக்கம் கலைத்தும்....