
தொப்புள்கொடி விடுபட்ட
குழந்தையாய் நிற்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் தரிப்பிலும்...
தேர்ந்தவனின் வல்லமைமிகு
வாசிப்பின் இசைபோல
ஒத்துழைக்கிறது வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் கிளைப்பிலும்...
வாழ்க்கை விலக்கியவற்றை
வாழ்க்கையெனப் போதையுறும்போது
வாழ்க்கை விலகுகிறது...
தன்முனைப்பிலும் தன்னாணவத்திலும்
தாய் வயிறு பற்றி குட்டிக்குரங்கைப்போல
தளர்வுறா பிடிவாதத்துடனும்
இயங்கிய வாழ்க்கையின்
மாயை விலகும்போது
முடிந்துவிடுகிறது வாழ்ந்ததான
வாழ்வு...
நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒரு
விபத்தினைப் பார்க்கும்
பரிதாப உணர்வுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறது
நம்மை
நமதான விலகிவிட்ட
வாழ்க்கை...
//வாழ்க்கை விலக்கியவற்றை
ReplyDeleteவாழ்க்கையெனப் போதையுறும்போது
வாழ்க்கை விலகுகிறது...//
//நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒரு
விபத்தினைப் பார்க்கும்
பரிதாப உணர்வுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறது
நம்மை
நமதான விலகிவிட்ட
வாழ்க்கை...//
வாழ்வு பற்றியும் மரணம் பற்றியும் நான் அறிந்தவரையில் மிகச் சிறந்த கவிதை இது ஞானபுத்திரன்.நல்ல கவிதையின் போதையில் மிதந்துகொண்டிருக்கிறேன்.மொழியின் பிடி வசமாகும்போது இப்படி ஆகிவிடுகிறது.
மாயை விலகும்போது
ReplyDeleteமுடிந்துவிடுகிறது வாழ்ந்ததான
வாழ்வு...
இருத்தலின் அவஸ்த்தை அவ்வளவே என்றாகிவிடுகிற கணத்தில் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலையாகி விடுகிற அற்புதம் நிகழ்ந்துவிடுகிறதோ...
நன்றி சுந்தர்ஜி.
ReplyDeleteவிட்டு விடுதலையாகுதல் என்பதுகூட ஒருவகை தப்பித்தலின் சுயமே. இருப்பினும் அது விதியென்பதான நிலைப்பாட்டின் கட்டுக்குள் வந்துவிடுகிறது. ஆனாலும் அது யாரிடமும் சொல்லிவிடமுடியாத இன்பமும் துன்பமும் தத்தளிக்கிற அற்புதம்தான். நன்றி நிலாமகள்.
ReplyDelete