
பங்கிட்டுக்கொள்ள
யாருமில்லை...
தங்களுக்காகக்கூட என்றில்லாமல்
முன்பின் யோசிக்காமலும்
ஒருசிறிதும் வெட்கமில்லாமலும்
பாரபட்சமில்லாமலும்
கோடானுக்கோடி சொற்களை
மூச்சிரைக்க..உடல் நொந்துபோக
வாரியிறைத்து காத்திருந்தார்கள்..
ஏக்கம் கொண்டார்கள்..
எதிர்பார்ப்புடன் கண்ணிமைக்காதிருந்தனர்
எப்படியும் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனும்
கண்களை அகலத் திறந்திருந்தார்கள்
வாழ்வின் இறுதியிலிருப்பதை
முகக்குறிப்பிலிருந்து
புரிந்துகொண்டார்கள்..
அழுகும் சதையும்..நாறும் குருதியும்
புழுக்களாய் புதுபுதுவென்று கிளம்பும்
அடங்கிய காற்று அடங்கிவிடாது
எழும்பிவிட்டாலென்று அறிந்தும் அறியாதிருந்தார்கள்..
அவர்களுக்குத் தேவை அடங்கியபின்
அழுகும் சதையும் குருதியும்
எலும்புகளுமல்ல..ஆனால் இவற்றின்
ஒத்துழைப்பால் கிடைத்த உயிரற்ற
அசையா அத்தனையும்...
கண்ணுக்குத் தெரியா காற்றுவெளியினை
உறவுகளெனும் ஒற்றைச் சொல்லால்
ஓயாது எச்சில்படுத்திக்கொண்டிருந்தார்கள்..
முன்பு சொல்லியிருந்த
இளமை நிலையாமை உயிர் நிலையாமை
யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை
எல்லாம் மறந்துவிட்டநிலையில்
அப்படி அறிந்திராத சொற்பிரதேசத்திலிருந்து
வந்தவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள்..
கண்களின் வழியான கடைசி பார்வை முழுக்க
அமைதியின் வடிவாய் அது காத்திருக்கிறது
அழகிய கைகளுடன்..
ஒவ்வொரு இனிய பொழுதில்
இவர்களையும் ஒவ்வொருவராய்..
எனவே
வாழும்வரை வாழ்வோம்
வாழ்க்கையை வாழ்க்கையாய்....