Friday, December 31, 2010
வ(ழி)லியறிதல்
பனிவிட்ட பொழுதின்பின்னும்
மழையடங்கி ஒளிந்தபின்னும்
ஈரம்தேக்கிய செங்கற்களினிடையே
கிடந்தது அந்த தேள்...
கிடைத்த நாட்களுக்குள் கலவிசெய்து
பேறும் முடிந்து நாலைந்து குஞ்சுகளுடன்
காத்துக்கிடந்தது..
இடமடைக்கிறதென செங்கற்களை
அப்புறப்படுத்துகையில் பொறுமைகாத்து
எடுக்கஎடுக்க அவசரஅவசரமாய்
கீழிறங்கிப்போனது காப்பாற்றிக்கொள்ள...
தரையொட்டிக்கிடந்த அந்த கடைசிக்கல்லில்
இருந்து ஏறியது விரலில்
சடக்கென்று ஒரு கொட்டு...
வலியேறியது நெஞ்சடைக்க
கண்ணிருட்ட கடுகடுவென்று கசக்கிப்பிழியும்
வேதனையுடன்...
நண்பர்களாய் இருந்த நாலைந்து கரப்புகள்
ஒன்றிரண்டு பூரான்கள்..பொட்டுப்பூச்சிகள்
சிலந்திகள் சில..கொஞ்சம் பிள்ளையார் எறும்புகள்..
அடர்கருப்புநிறமேந்திய சில பல்லிகள்
இவர்களை விரட்டிய குற்றத்திற்காகவும்...
கடைசியாக தன் குடும்பத்தோடு
மிஞ்சாத வாழ்வில் ஏற்கும் மரணத்திற்காகவும்
காலத்தில் நீ செய்யாத பணிக்காக
எங்களுக்கு மரணமா என்பதையுணர்த்தவுமாக
அந்த கொட்டும் விஷமும் வலியும்...
வலிபொறுக்காது அடைந்த சினத்தின்
வலியாகக் குஞ்சுகளோடு இறந்துகிடந்தது
நமதான அந்தத் தேள்
வலியுறுத்தி...
Labels:
வ(ழி)லியறிதல்
Subscribe to:
Post Comments (Atom)
தேளின் பார்வையில் கொட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்.
ReplyDelete//நண்பர்களாய் இருந்த நாலைந்து கரப்புகள்
ஒன்றிரண்டு பூரான்கள்..பொட்டுப்பூச்சிகள்
சிலந்திகள் சில..கொஞ்சம் பிள்ளையார் எறும்புகள்..
அடர்கருப்புநிறமேந்திய சில பல்லிகள்//
எத்தனை உயிர்களோடு யாருக்கும் தொந்தரவின்றி வாழ்ந்த குடும்பத்தை ஒரே நகர்த்தலில் தீர்த்துக் கட்டிவிட்டான் மனிதன்?
மனிதனைப் போல் பிற உயிர்களை மதிக்காத பிறவி வேறெதுவும் இல்லை.
சிறப்பான தேளின் கொடுக்கையொத்த பார்வை.
நறுக்கென்றது கொட்டியது
ReplyDeleteகவிதைத் தேள்.
'காலத்தில் நீ செய்யாத பணிக்காக
எங்களுக்கு மரணமா "
என்ற கொடுக்கின் மூலம்.
எனக்கு சிறு வயதில் படித்த நிஷ்ஷிம் இஷகேல் எழுதிய Night of the Scorpion என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. தன் தாயை தேள் கடித்த அந்த இரவை விவரித்து எழுதி இறுதியாய் இப்படி முடித்திருப்பார்.
My mother only said
Thank God the scorpion picked on me
And spared my children.
இந்த இறுதி வரிகளை மட்டும் என் நாட்குறிப்பில் வெகு காலம் குறித்து வைத்திருந்தேன்.
நன்றி
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
January 01, 2011
வருக சுந்தர்ஜி. ஏழ்மை ஒழிந்து வளம் பெறட்டும். மனிதனைத்தவிர மற்றவை அடுத்தவர் நிழலைக்கூடத் தொடுவதில்லை தனது நிஜம் பாதிப்பு அடையும்வரையில். நன்றி உங்களுக்கு.
ReplyDeleteவாருங்கள் குமரன். இஷகேல் கவிதையைத் தேடிப் படிக்கிறேன். எனது தந்தையின் அருகில் படுத்திருந்த இரவில் தேள் கொட்டியது. கொட்டியது தேள் என்றுணர்ந்ததும் என் தந்தை உடன் தேளைக் கையால் அழுந்த அழுத்திக்கொண்டு மற்றொரு கையால் அருகில் படுத்திருந்த என் சகோதரனை ஒருமுறையும் அப்புறம் என்னை ஒருமுறையும் தள்ளிவிட்டார். இந்த இடைவெளியில் இருமுறை தேள் கொட்டியது மீண்டும் அவரை. நாங்கள் காப்பாற்றப்பட்டோம். அந்த துன்பத்தை ஒருவாரம் அனுபவித்தார் என் தந்தை. இன்றும் நினைவில் இருக்கிறது அந்த அன்பின் பரிமாணம். நன்றி. வாழ்த்திற்கும்.
ReplyDelete