Tuesday, December 7, 2010
துறவு
அப்போது கிடைத்துவிடும்...
மலச்சிக்கலின் அனுபவிப்பைப் போல
கண்கள் சிவப்பேறி வலிக்கவும்
மூக்கினுள் நீரேறிக்கொள்ளவும்
வேண்டாமல் வாய்நிறைய நீர்குடித்தும்
நீச்சல்
கற்றுக்கொண்டபின் கண்ணில்படும்
வெள்ளப்பெருக்காற்றைப்
பார்க்கையில் வரும் அலட்சியத்தில்...
பிடித்தது பிடிபடாமலும்
பிடிபட்டதில் தப்பிக்கமுடியாமலும்
விரும்பியதை சுவைக்கவியலாமலும்
விருப்பமற்றதை விடமுடியாமலும்
மனம் திறக்கா கதவுகளின் முன்னாலும்
காயப்படுத்தும் காத்திருப்புக்களிலும்
உடலை நகர்த்தி உயிரை அசைக்கும்
பொழுதுகளின் வெப்பத்திலும்...
நெடுநேரம் அடக்கிவைத்த சிறுநீர்
நெடுநேரம் அடக்கிவைத்த தாகம்
இரண்டும் விடுபட்ட சொல்லிலெழுதா
சுகமென அனுபவித்த காமத்தின்
கழித்த பின்னரும்....
எங்கும் திருப்தியுறாவண்ணம்
எதிலும் நிறைவுறாவண்ணம்
இடர்களிலும் தடைகளிலும்
சிக்கல்களிலும் வீசியெறியப்பட்ட
வாழ்வைச் சகித்துக்கொண்டு
நம்பிக்கையின் ஊசிமுனைகளில்
வாழ்ந்திருக்கிறேன் என்று
ஓங்கிச் சொல்லும் திருப்தியின் பின்னரும்...
அப்போது கிடைத்துவிடும்
துறவு நன்மைகளோடு
விடைபெறுவதற்கும்....
Labels:
துறவு
Subscribe to:
Post Comments (Atom)
//நெடுநேரம் அடக்கிவைத்த சிறுநீர்
ReplyDeleteநெடுநேரம் அடக்கிவைத்த தாகம்
இரண்டும் விடுபட்ட சொல்லிலெழுதா
சுகமென அனுபவித்த காமத்தின்
கழித்த பின்னரும்//
துறவுக்கு இட்டுச் செல்லும் பாதை முட்களாலானதாக இருக்கிறது ஞானபுத்திரன்.அது மலர்களால் நிரம்பியிருக்கையில் துறவின் மேற்புறம் ஞானத்தால் மூடப்படுகிறது.