Monday, February 28, 2011

அது




பாதி மண்ணில் புதைந்தும்
புதைந்துவிடுவேன் மொத்தமும்
எனத் தெரியும் பாதியுமாய்
கிடந்தது அது...

அதுவும் பேசவில்லை
அதைப்பற்றி ஏந்திய மண்ணும்
உரைக்கவில்லையேதும்...

எதுவுமிருக்கலாம் அதன் மனதில்
யாரறிவார் படைத்தவனன்றி..

விருப்பமற்றவைகளுக்காக கொஞ்சம்
வெறுப்புக்களாய் கொஞ்சம்
கொன்றது கொஞ்சம் உயிரைத் தின்றது
கொஞ்சம்..
இரக்கமின்றித்தான் எல்லாவற்றையும்
உருவிய வதம் நிகழ்ந்தது...
ஒரு புள்ளியென அன்பு..
உதறலில் ஒரு ஆறுதல்..
சும்மா உரசலில் கொஞ்சம் சுகம்..
மற்றவையெல்லாம் சொல்வதற்கில்லை
யூகிக்கிறேனென்னால் அதற்குப் பொறுப்புமில்லை..


எழுதியதால்தான் இந்த நிலையென்கிறது
ஒரு கூட்டம்...
எழுதாமல் இருப்பதால்தான் இந்த கதியென்கிறது
ஒரு கூட்டம்...
என்னவெல்லா எழுதியதோ யார் கண்டா?
எத்தனை மரியாதை இருந்திருக்கும்
எத்தனை அவமானம் இப்போது

மனசில் கசிகிறது
அதன் கலைக்கப்படாத வாழ்வின்
தொடக்கம்...

எல்லோருக்கும்தான்..

Monday, January 17, 2011

பயணம்




நீண்டுகிடந்த உடலையெழுப்பி
நீர்விட்டு அலம்பி சுத்தம் செய்து
உடைமாற்றி ஒப்பனையிட்டுப்
புறப்பட்டுவிட நெடுநாள் வாய்க்காத
பயணமொன்று வாய்த்தது...

உடன் மனம் துள்ளி
பட்டியலிட்டது என்னென்ன
உடன் கொண்டுபோக நலம் பயக்குமென்று...

சிதறாமல் செலவு செய்திட
கொஞ்சம் சிரிப்பு...
நாலைந்து கொட்டாவிகள்
இருக்கட்டுமேயென்று இலைகாம்பளவு
இயலாமை
பயணத்தை நினைத்துப்பார்க்க..
கைப்பிடியளவு கோபம்
பயணத்தை அலுப்பூட்டாது...
கொஞ்சம் தாராளமாய்
சிறிய தலையணை அளவு உறக்கம்..
எதற்கும் செருகிக்கொள்ளுங்கள்
என்றவள் சொல்ல ரோஷத்தில் கொஞ்சம்..
கேரி பேக்களவில் பொறாமை..ஆதங்கம்..
ஏக்கம்..எதிர்பார்ப்பு..இவை பொட்டலங்களில்..

உடம்பும் மனசும் கணத்துபோனது
இவற்றின் பாரத்தால் இருப்பினும்
பாதுகாப்பான பயணத்திற்கு
இவையாவும் அவசியமானவை...

ஏதோ விடுபட்டது என்று
யோசிக்கையில் சட்டென்று
நினைவில் உறுத்தியது
குழப்பம் விடுபட்டுவிட்டதென்று..
அதற்கும் இடமிருந்தது...

இப்போது பயணத்தில்.
நெடிய முடிவுறா பயணமது.
அவரவர் கொண்டுவந்ததைப்
பரிமாறும் சந்தர்ப்பங்களில்
பயணத்தின் பயன்கள் எல்லாம்
பரிதவித்துக் கரைந்துபோயின..

பயணம் முடிவுறும்போது
உயர்ந்த வானிலிருந்து கோழிக்குஞ்சுக்காய்
கீழிறங்கி ஏமாந்துபோகும்
பருந்தின் வீழ்ச்சியாய்..

வெறுமை நிறைகிறது
பயணத்தின் முடிவுறுதலுக்கு முன்
எதனாலும் ஈடுசெய்யமுடியாததாய்...

Sunday, January 2, 2011

தெளிதல்



விளைந்தது யாவும்
விலைக்குள் அடங்காது,..

களைந்தது யாவும்
களங்கத்தில் அடங்காது...

வெந்தது யாவும்
பசியாற்றலில் அடங்காது...

மீந்தது யாவும்
கழித்தலில் அடங்காது...

தெளிந்தது யாவும்
வீடுபேற்றில் அடங்காது...

தேர்ந்தது யாவும்
திறத்தில் அடங்காது....

யாவும் யாவும் எண்ணில்
யாவற்றிலும் அடங்காது...

வெந்தது பதமாகும்
நொந்தது நுர்லாகும்
பதமும் நுர்லும்
ஞானமாகும்..தெளிதலில்
ஞானமுமொரு
படிக்கல்லாகும்...

படியாய் கிடந்து
தெளிவோம்...

Friday, December 31, 2010

வ(ழி)லியறிதல்





பனிவிட்ட பொழுதின்பின்னும்
மழையடங்கி ஒளிந்தபின்னும்
ஈரம்தேக்கிய செங்கற்களினிடையே
கிடந்தது அந்த தேள்...

கிடைத்த நாட்களுக்குள் கலவிசெய்து
பேறும் முடிந்து நாலைந்து குஞ்சுகளுடன்
காத்துக்கிடந்தது..

இடமடைக்கிறதென செங்கற்களை
அப்புறப்படுத்துகையில் பொறுமைகாத்து
எடுக்கஎடுக்க அவசரஅவசரமாய்
கீழிறங்கிப்போனது காப்பாற்றிக்கொள்ள...

தரையொட்டிக்கிடந்த அந்த கடைசிக்கல்லில்
இருந்து ஏறியது விரலில்
சடக்கென்று ஒரு கொட்டு...

வலியேறியது நெஞ்சடைக்க
கண்ணிருட்ட கடுகடுவென்று கசக்கிப்பிழியும்
வேதனையுடன்...

நண்பர்களாய் இருந்த நாலைந்து கரப்புகள்
ஒன்றிரண்டு பூரான்கள்..பொட்டுப்பூச்சிகள்
சிலந்திகள் சில..கொஞ்சம் பிள்ளையார் எறும்புகள்..
அடர்கருப்புநிறமேந்திய சில பல்லிகள்
இவர்களை விரட்டிய குற்றத்திற்காகவும்...
கடைசியாக தன் குடும்பத்தோடு
மிஞ்சாத வாழ்வில் ஏற்கும் மரணத்திற்காகவும்
காலத்தில் நீ செய்யாத பணிக்காக
எங்களுக்கு மரணமா என்பதையுணர்த்தவுமாக
அந்த கொட்டும் விஷமும் வலியும்...

வலிபொறுக்காது அடைந்த சினத்தின்
வலியாகக் குஞ்சுகளோடு இறந்துகிடந்தது
நமதான அந்தத் தேள்
வலியுறுத்தி...

Tuesday, December 7, 2010

துறவு



அப்போது கிடைத்துவிடும்...

மலச்சிக்கலின் அனுபவிப்பைப் போல
கண்கள் சிவப்பேறி வலிக்கவும்
மூக்கினுள் நீரேறிக்கொள்ளவும்
வேண்டாமல் வாய்நிறைய நீர்குடித்தும்
நீச்சல்
கற்றுக்கொண்டபின் கண்ணில்படும்
வெள்ளப்பெருக்காற்றைப்
பார்க்கையில் வரும் அலட்சியத்தில்...

பிடித்தது பிடிபடாமலும்
பிடிபட்டதில் தப்பிக்கமுடியாமலும்
விரும்பியதை சுவைக்கவியலாமலும்
விருப்பமற்றதை விடமுடியாமலும்
மனம் திறக்கா கதவுகளின் முன்னாலும்
காயப்படுத்தும் காத்திருப்புக்களிலும்
உடலை நகர்த்தி உயிரை அசைக்கும்
பொழுதுகளின் வெப்பத்திலும்...


நெடுநேரம் அடக்கிவைத்த சிறுநீர்
நெடுநேரம் அடக்கிவைத்த தாகம்
இரண்டும் விடுபட்ட சொல்லிலெழுதா
சுகமென அனுபவித்த காமத்தின்
கழித்த பின்னரும்....


எங்கும் திருப்தியுறாவண்ணம்
எதிலும் நிறைவுறாவண்ணம்
இடர்களிலும் தடைகளிலும்
சிக்கல்களிலும் வீசியெறியப்பட்ட
வாழ்வைச் சகித்துக்கொண்டு
நம்பிக்கையின் ஊசிமுனைகளில்
வாழ்ந்திருக்கிறேன் என்று
ஓங்கிச் சொல்லும் திருப்தியின் பின்னரும்...


அப்போது கிடைத்துவிடும்
துறவு நன்மைகளோடு
விடைபெறுவதற்கும்....

Monday, November 29, 2010

இருப்பு


தொப்புள்கொடி விடுபட்ட
குழந்தையாய் நிற்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் தரிப்பிலும்...

தேர்ந்தவனின் வல்லமைமிகு
வாசிப்பின் இசைபோல
ஒத்துழைக்கிறது வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் கிளைப்பிலும்...

வாழ்க்கை விலக்கியவற்றை
வாழ்க்கையெனப் போதையுறும்போது
வாழ்க்கை விலகுகிறது...

தன்முனைப்பிலும் தன்னாணவத்திலும்
தாய் வயிறு பற்றி குட்டிக்குரங்கைப்போல
தளர்வுறா பிடிவாதத்துடனும்
இயங்கிய வாழ்க்கையின்
மாயை விலகும்போது
முடிந்துவிடுகிறது வாழ்ந்ததான
வாழ்வு...

நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒரு
விபத்தினைப் பார்க்கும்
பரிதாப உணர்வுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறது
நம்மை
நமதான விலகிவிட்ட
வாழ்க்கை...

Friday, November 26, 2010

வாய்த்தல்




ஒவ்வொரு நாளும்
சாலைகளில்
கண்களறியாத உயிர்கள்
தொடங்கி
கன்றுக்குட்டிகள்
நாய்க்குட்டிகள்
ஆட்டுக்குட்டிகள்
கோழிக்குஞ்சுகள்
பூனைக்குட்டிகள்
இவற்றோடு
மனிதக் குட்டிகளும்

கண்ணுக்குத் தெரியாமல்
வரையப்பட்டிருக்கும்
மரணக் கத்தியில்
வெட்டுப்பட்டு
உயிரற்றதுவாய்...

மனசு கேட்கிறது
திடீரென்று வரும் மரணத்தில்
அவை என்ன நினைக்கும்?

எல்லாம் மறந்த நாளில்
முகமறியா குரல்வழி
விடை கசிகிறது..

பொசுக்குன்னு உயிர்போற
புண்ணியம் எல்லாருக்கும்
கிடைக்குமா?,........

கிடைக்குமா இதுதான்
சரியான விடையென்பதற்காதாரம்..?