Monday, January 17, 2011

பயணம்




நீண்டுகிடந்த உடலையெழுப்பி
நீர்விட்டு அலம்பி சுத்தம் செய்து
உடைமாற்றி ஒப்பனையிட்டுப்
புறப்பட்டுவிட நெடுநாள் வாய்க்காத
பயணமொன்று வாய்த்தது...

உடன் மனம் துள்ளி
பட்டியலிட்டது என்னென்ன
உடன் கொண்டுபோக நலம் பயக்குமென்று...

சிதறாமல் செலவு செய்திட
கொஞ்சம் சிரிப்பு...
நாலைந்து கொட்டாவிகள்
இருக்கட்டுமேயென்று இலைகாம்பளவு
இயலாமை
பயணத்தை நினைத்துப்பார்க்க..
கைப்பிடியளவு கோபம்
பயணத்தை அலுப்பூட்டாது...
கொஞ்சம் தாராளமாய்
சிறிய தலையணை அளவு உறக்கம்..
எதற்கும் செருகிக்கொள்ளுங்கள்
என்றவள் சொல்ல ரோஷத்தில் கொஞ்சம்..
கேரி பேக்களவில் பொறாமை..ஆதங்கம்..
ஏக்கம்..எதிர்பார்ப்பு..இவை பொட்டலங்களில்..

உடம்பும் மனசும் கணத்துபோனது
இவற்றின் பாரத்தால் இருப்பினும்
பாதுகாப்பான பயணத்திற்கு
இவையாவும் அவசியமானவை...

ஏதோ விடுபட்டது என்று
யோசிக்கையில் சட்டென்று
நினைவில் உறுத்தியது
குழப்பம் விடுபட்டுவிட்டதென்று..
அதற்கும் இடமிருந்தது...

இப்போது பயணத்தில்.
நெடிய முடிவுறா பயணமது.
அவரவர் கொண்டுவந்ததைப்
பரிமாறும் சந்தர்ப்பங்களில்
பயணத்தின் பயன்கள் எல்லாம்
பரிதவித்துக் கரைந்துபோயின..

பயணம் முடிவுறும்போது
உயர்ந்த வானிலிருந்து கோழிக்குஞ்சுக்காய்
கீழிறங்கி ஏமாந்துபோகும்
பருந்தின் வீழ்ச்சியாய்..

வெறுமை நிறைகிறது
பயணத்தின் முடிவுறுதலுக்கு முன்
எதனாலும் ஈடுசெய்யமுடியாததாய்...

2 comments:

  1. எதையெதையெல்லாமோ எடுத்துப்போகிறோம் தேவைப்படலாமென.

    எதுவுமே தேவையற்றுப்போவதாக முடிவுற்று நிறைகிறது பயணம்.

    எதையும் கொண்டுவராது வந்து இந்தக் கவிதையைக் கொண்டு செல்கிறேன்.

    ReplyDelete
  2. இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.
    உங்கள் வலைப்பூவை தமிழ் மணம், இன்ட்லியுடன் இணைக்கலாமே..

    ReplyDelete