
பனிவிட்ட பொழுதின்பின்னும்
மழையடங்கி ஒளிந்தபின்னும்
ஈரம்தேக்கிய செங்கற்களினிடையே
கிடந்தது அந்த தேள்...
கிடைத்த நாட்களுக்குள் கலவிசெய்து
பேறும் முடிந்து நாலைந்து குஞ்சுகளுடன்
காத்துக்கிடந்தது..
இடமடைக்கிறதென செங்கற்களை
அப்புறப்படுத்துகையில் பொறுமைகாத்து
எடுக்கஎடுக்க அவசரஅவசரமாய்
கீழிறங்கிப்போனது காப்பாற்றிக்கொள்ள...
தரையொட்டிக்கிடந்த அந்த கடைசிக்கல்லில்
இருந்து ஏறியது விரலில்
சடக்கென்று ஒரு கொட்டு...
வலியேறியது நெஞ்சடைக்க
கண்ணிருட்ட கடுகடுவென்று கசக்கிப்பிழியும்
வேதனையுடன்...
நண்பர்களாய் இருந்த நாலைந்து கரப்புகள்
ஒன்றிரண்டு பூரான்கள்..பொட்டுப்பூச்சிகள்
சிலந்திகள் சில..கொஞ்சம் பிள்ளையார் எறும்புகள்..
அடர்கருப்புநிறமேந்திய சில பல்லிகள்
இவர்களை விரட்டிய குற்றத்திற்காகவும்...
கடைசியாக தன் குடும்பத்தோடு
மிஞ்சாத வாழ்வில் ஏற்கும் மரணத்திற்காகவும்
காலத்தில் நீ செய்யாத பணிக்காக
எங்களுக்கு மரணமா என்பதையுணர்த்தவுமாக
அந்த கொட்டும் விஷமும் வலியும்...
வலிபொறுக்காது அடைந்த சினத்தின்
வலியாகக் குஞ்சுகளோடு இறந்துகிடந்தது
நமதான அந்தத் தேள்
வலியுறுத்தி...