Saturday, April 9, 2016







                          மீள்வது
                          மீட்டெடுப்பது
                          நிறைவன்று
                          இரண்டிலும்
                          இருப்பின் திறனை
                          தக்க வைப்பதே...      

Tuesday, June 17, 2014

உன்னோடு வாழ்தல் அரிது




                                 கவனிக்கவில்லைதான்
                                 சாலையைக் கடக்க முயன்ற அவனும்
                                 அவனைக் கடந்துகொன்ற பேருந்தும்
                                 சற்றுமுன் உயிர்த்திருந்தவன்
                                 ரத்தக்குட்டையில் செருகிக்கிடந்தான்
                                கூட்ட்ம் கூட்டம்.
                                 எல்லாவற்றுக்கும் சொல்லியனுப்பியிருக்க
                                 உறைந்துகிடந்த ரத்தத்தில் சிக்கிய
                                 ஈக்கள் தவித்துக்கொண்டிருந்தன
                                 அவனது கடைசி மரணத்தின்
                                 பின் தொடர்ச்சியாய் செல்வதைப்போல,,,
                                 காவலுக்கு வந்த காவலர்கள்
                                 டீக்கடையில் டீப்போடச் சொல்லிவிட்டு
                                 பாட்டிலைத் திறந்து எடுத்த
                                 இனிப்பு ரொட்டியைத் தின்றபடி
                                 கண்கள் இறந்துகிடந்தவனின்
                                 ரத்தத்தை தொட்டுக்கொள்வதைப்போல
                                 கூட்டம் மாறிக்கொண்டேயிருந்தது
                                  குறையாது..

                                   மாலைத்தாளின் செய்திக்காக
                                   துடித்துக்கொண்டிருந்தார்கள்
                                   தவிர எதுவுமில்லை அவனது
                                   சாவு குறித்து சொல்வதற்கு..

                                   00000

Sunday, June 10, 2012


           ஜென் இலைகள் 4


 
            உதிர்தலில் கூட
            இணைவானது
            உதிர்தலின் விலகல்
            உறுதிப்படாதவரை,,,

            எல்லாம் உதிர்ந்தபின்
            ஒட்டியிருக்கும்
            நாடியும் நரம்பும்
            உணர்வின் உணர்வின்
            நகல் பிம்பம்,,,

            உதிர்க்கவும் உதிரவும்
            உறுதிப்படுவோம்....

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



          எப்படியிருந்தோம்
          வானின் வாசனையுணர்ந்து
          மேகத்தின் மோகமறிந்து
          காற்றின் புணர்வில்
          களிப்புற்றிருந்தோம்
          விடுபடத்தொடங்கிய சூழலில்
          காற்றேணியில் இறங்கிக்கொண்டு
          கூடிக் களைத்தோம் மண்ணில்
           இனி மண்ணோடு மண்ணாய்
            கரைந்தாலும்
           கிடக்கும்வரை அண்ணாந்து
           அன்னையை மன்றாடுவோம்
           மீண்டும் பிறக்கக் கடவதாக,,,,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


         வீசியெறியப்பட்ட அழுகிய
         பழத்திலிருந்து வெளிப்பட்ட புழு
        நன்றி சொன்னது
        அழுகலின் மரணத்திற்கு
        அஞ்சலி கூறியது
         நகரத்தொடங்கியது
         பூமியின் நுனியில் அழுகலின்
        தொடக்கமாய் ஊர்கிறேனென்று
         எண்ணமுடன்,,,


0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                     எந்த சிறகையும் முறிக்கலாம்
                     முன்னொரு நிபந்தனை
                      அதுபறந்த வெளியினை
                      அளந்து பறக்க வேறொரு
                      சிறகை வரையும் மனத்தை
                      கொடுத்துவிட்டு,,,


00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                   
     




Sunday, October 30, 2011

மாயை





இருப்பனவற்றுள்
புதைந்தபடியேதான்
இல்லாதவற்றின் இருப்பை
மீட்டெடுக்கிறது அலைகிற மனம்...

எந்தக் கத்தியின்
செய் நேர்த்தியும்
முழுமையைச் சிதைப்பதற்காகவே
என்ற உணராமையைத்தான்
மறைந்தொழுகுகிறது அலைகிற மனம்...

எல்லாவற்றின் துல்லிய அசைவுகளையும்
அணுஅணுவாய் இயக்கும் உயிரின்
உன்னதங்களுக்கு முன்னால்தான்
அறியாமையின் அத்தனையையும்
கட்டவிழ்க்கிறது அலைகிற மனம்...

மாயையின் தோலுரிக்கும்
உண்மையின் பின்னேதான்
ஒவ்வொரு வாழ்க்கையின்
இறுதி முடிச்சையும்
காட்சிப்படுத்தியிருக்கிறது கடவுள்
என்பதான ஒன்று...

ஆனாலும்
இறுதியில்தான் இறுதி முடிச்சை
அவிழ்க்க வைக்கிறது
வாழ்வதான தோற்றமுரைக்கும்
மாயை.....

Saturday, March 5, 2011

ஜென் இலைகள் 3





ஒரு வலியை இன்னொரு
வலிதான் இடம்பெயர்க்கிறது...

ஒரு வாழ்வை இன்னொரு
வாழ்வுதான் அர்த்தப்படுத்துகிறது...

ஒரு கோபத்தை இன்னொரு
கோபம்தான் சந்துவிக்கிறது...

ஒரு ஆறுதலை இன்னொரு
ஆறுதல்தான் உணரவைக்கிறது...

ஒரு அவமானத்தை இன்னொரு
அவமானம்தான் அடையாளப்படுத்துகிறது...

ஒரு அசிங்கத்தை இன்னொரு
அசிங்கம்தான் மூடிவைக்கிறது...

ஒரு ஆளுமையை இன்னொரு
ஆளுமைதான் நிலைப்படுத்துகிறது...

ஒரு நம்பிக்கையை இன்னொரு
நம்பிக்கைதான் நிறைவு செய்கிறது..

ஒரு வழியை இன்னொரு
வழிதான் உருவாக்கித்தருகிறது...


இவை எல்லாவற்றையும்
கடவுள்தான்
பிரிப்பதும் கோர்ப்பதுமான
நிகழ்வுகளாக்கி வைக்கிறார்
எதுவும் தெரியாதததுபோல.....

Monday, February 28, 2011

அது




பாதி மண்ணில் புதைந்தும்
புதைந்துவிடுவேன் மொத்தமும்
எனத் தெரியும் பாதியுமாய்
கிடந்தது அது...

அதுவும் பேசவில்லை
அதைப்பற்றி ஏந்திய மண்ணும்
உரைக்கவில்லையேதும்...

எதுவுமிருக்கலாம் அதன் மனதில்
யாரறிவார் படைத்தவனன்றி..

விருப்பமற்றவைகளுக்காக கொஞ்சம்
வெறுப்புக்களாய் கொஞ்சம்
கொன்றது கொஞ்சம் உயிரைத் தின்றது
கொஞ்சம்..
இரக்கமின்றித்தான் எல்லாவற்றையும்
உருவிய வதம் நிகழ்ந்தது...
ஒரு புள்ளியென அன்பு..
உதறலில் ஒரு ஆறுதல்..
சும்மா உரசலில் கொஞ்சம் சுகம்..
மற்றவையெல்லாம் சொல்வதற்கில்லை
யூகிக்கிறேனென்னால் அதற்குப் பொறுப்புமில்லை..


எழுதியதால்தான் இந்த நிலையென்கிறது
ஒரு கூட்டம்...
எழுதாமல் இருப்பதால்தான் இந்த கதியென்கிறது
ஒரு கூட்டம்...
என்னவெல்லா எழுதியதோ யார் கண்டா?
எத்தனை மரியாதை இருந்திருக்கும்
எத்தனை அவமானம் இப்போது

மனசில் கசிகிறது
அதன் கலைக்கப்படாத வாழ்வின்
தொடக்கம்...

எல்லோருக்கும்தான்..

Monday, January 17, 2011

பயணம்




நீண்டுகிடந்த உடலையெழுப்பி
நீர்விட்டு அலம்பி சுத்தம் செய்து
உடைமாற்றி ஒப்பனையிட்டுப்
புறப்பட்டுவிட நெடுநாள் வாய்க்காத
பயணமொன்று வாய்த்தது...

உடன் மனம் துள்ளி
பட்டியலிட்டது என்னென்ன
உடன் கொண்டுபோக நலம் பயக்குமென்று...

சிதறாமல் செலவு செய்திட
கொஞ்சம் சிரிப்பு...
நாலைந்து கொட்டாவிகள்
இருக்கட்டுமேயென்று இலைகாம்பளவு
இயலாமை
பயணத்தை நினைத்துப்பார்க்க..
கைப்பிடியளவு கோபம்
பயணத்தை அலுப்பூட்டாது...
கொஞ்சம் தாராளமாய்
சிறிய தலையணை அளவு உறக்கம்..
எதற்கும் செருகிக்கொள்ளுங்கள்
என்றவள் சொல்ல ரோஷத்தில் கொஞ்சம்..
கேரி பேக்களவில் பொறாமை..ஆதங்கம்..
ஏக்கம்..எதிர்பார்ப்பு..இவை பொட்டலங்களில்..

உடம்பும் மனசும் கணத்துபோனது
இவற்றின் பாரத்தால் இருப்பினும்
பாதுகாப்பான பயணத்திற்கு
இவையாவும் அவசியமானவை...

ஏதோ விடுபட்டது என்று
யோசிக்கையில் சட்டென்று
நினைவில் உறுத்தியது
குழப்பம் விடுபட்டுவிட்டதென்று..
அதற்கும் இடமிருந்தது...

இப்போது பயணத்தில்.
நெடிய முடிவுறா பயணமது.
அவரவர் கொண்டுவந்ததைப்
பரிமாறும் சந்தர்ப்பங்களில்
பயணத்தின் பயன்கள் எல்லாம்
பரிதவித்துக் கரைந்துபோயின..

பயணம் முடிவுறும்போது
உயர்ந்த வானிலிருந்து கோழிக்குஞ்சுக்காய்
கீழிறங்கி ஏமாந்துபோகும்
பருந்தின் வீழ்ச்சியாய்..

வெறுமை நிறைகிறது
பயணத்தின் முடிவுறுதலுக்கு முன்
எதனாலும் ஈடுசெய்யமுடியாததாய்...